அகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள அற்புதமான பயிற்சி தியானம். இதை முறைப்படி செய்வதன் மூலம் தனக்குள்ளிருக்கும் ஆத்துமாவை அறியமுடிவதுடன் தனக்குத்தானே வழிகாட்டியாகவும் இருக்கமுடியுமென ஸ்ரீ சிவகிருபானந்த சுவாமி தெரிவித்தார்.
அண்மையில் இலங்கை வந்த இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீ சிவகிருபானந்த சுவாமி ஒருமித்த உலகின் அமைதி எனும் தொணிப்பொருளில் கொழும்பு, குருனாகல் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் தியானம் மற்றும் அதன் மகத்துவம் பற்றி தெளிவுபடுத்தியதோடு செயன்முறையிலான பயிற்சியினையும் வழங்கியிருந்தார்.
அது தொடர்பில் தெளிவுபடுத்திய ஸ்ரீ சிவகிருபானந்த சுவாமி,
பொதுவாக யோகாசனம் என்பது இன்று பல நாடுகளிலும் பின்பற்றப்படுகின்ற ஒன்றாக உள்ளது. இது ஒரு உடற்பயிற்சி அம்சமாகும். அதாவது உடலை அழகாக கட்டமைப்புடன் வைத்துக்கொள்ள இது உதவுகிறது. ஆனால் தியானத்தின் ஊடாக உள்ளத்தை அதாவது அகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு அகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ளும்போது வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் ஏற்படுகிறது. அதனூடாக அமைதியான உலகை உருவாக்கலாம்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அனேகமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைகின்ற போதும் திருப்தியற்ற மனநிலையில் இருக்கின்றார்கள் தியானத்தின் ஊடாக திருப்தியற்ற மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி அமைதியான மனநிறைவுடன் கூடிய வாழ்க்கையை பெற்றிடலாம்.
தியானத்தில் ஒரு எளிதான யுக்தி சமர்ப்பணத் தியானமாகும். யோக நிலைகள், மூச்சுப் பயிற்சிகள் போன்றவை இதில் இல்லை. எனவே யார் வேண்டுமானாலும் இதை மிகவும் எளிதாக செய்ய முடியும். வயது வித்தியாசமோ, அல்லது தனிப்பட்ட வாழ்க்கை முறையோ அல்லது அவர் எவ்வாறான பலக்கவழக்கங்ளை கொண்டவராக இருந்தாலும் அவர் அந்த தியான முறையை பின்பற்றலாம். அதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.
இந்த பிரஞ்ச சக்தியோடு அவரவருக்கான அனுபவத்தை பெறுவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். மனதைத் தெளிவுபடுத்தி ஒருவருடைய ஆத்மாவோடு இணைப்பதற்கான ஒரு யுக்தியே தியானமாகும். ஒருவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நல்ல இணக்கத்தையும் தியானத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம் தியானத்தின் ஊடாக இறந்தகால சம்பவங்கள் பற்றிய அச்சநிலைகளையும் வருங்காலம் பற்றிய கவலைகளையும் துறக்க முடிவதுடன் தியானம் செய்பவர் பிரஞ்ச சக்தியோடு தன்னை இணைத்துக்கொள்கிறார்.
இந்த சக்தியானது அவருடைய உடல், மனம் மற்றும் ஆத்மாவைத் தூய்மையாக்குகிறது. ஆகையால் சலனமற்றதொரு நிலையை அடைந்து அவரால் ஆழ் தியான நிலையை அடையமுடிகிறது. சமர்ப்பணத் தியாணம் முழுமையானதொரு தியான வழிமுறையாகும். உடலிலுள்ள மூன்று நாடிகளையும் ஏழு சக்தி மையங்களையும் ஈடுபடச்செய்கிறது. இவ்வாறு முறையாக தியானம் செய்வதன் ஊடாக தனக்குள்ளிருக்கும் ஆத்துமாவை அறியமுடிவதுடன் தனக்குத்தானே வழிகாட்டியாக மாறமுடிகிறது எனவும் ஸ்ரீ சிவகிருபானந்த சுவாமி தெரிவித்தார்.
Discussion about this post