இணைந்த ஆய்வு மற்றும் புத்தாக்கமான ஆய்வுகூடத்தை அமைப்பது தொடர்பில் SLIIT மற்றும் Huawei இற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
பல்லேகலவில் உள்ள SLIIT கண்டி பல்கலைக்கழகத்தில் கூட்டு ஆய்வு முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் புத்தாக்கமான ஆய்வுகூடத்தை அமைக்கும் நோக்கில் உலகளாவிய ரீதியில் உள்ள மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான Huawei உடன் SLIIT கண்டி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது.
SLIIT இன் தலைவரும் வேந்தருமான பேராசிரியர் லக்ஷ்மன் ரத்னாயக, Huawei Technologies Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.சன்ங் ஜின்சா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்த நிகழ்வில் கல்வியியல் பிரதித் துணை வேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் ரத்னாயக, ஆய்வு மற்றும் சர்வதேச விவகார பிரதித் துணை வேந்தர் பேராசிரியர் சமந்த தெலிஜ்ஜகொட, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் அஜந்த கோமஸ், கணினிப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பிரதீப் அபேகுணவர்த்தன, SLIIT கண்டி பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பீடாபதிதி கலாநிதி மாதவ ஹேரத், சட்ட மற்றும் பெருநிறுவன விவகார சிரேஷ்ட முகாமையாளர் செல்வி நடாஷா ரணதுங்க மற்றும் செல்வி சொனாலி சேனாநாயக ஆகியோர் SLIIT சார்பில் கலந்துகொண்டனர். அதேநேரம், Huawei நிறுவனத்தின் சார்பில் EBG இன் பிரதித் தலைவர் திரு. நீ ஷாபிங், EBG இன் அரசாங்க மற்றும் பெருநிறுவனங்களுக்கான பணிப்பாளர் திரு . இசுறு ஜயசேகர, EBG இன் தீர்வுகளுக்கான பணிப்பாளர் திரு. நதுன் குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
கண்டியில் உள்ள Huawei தகவல் தொழில்நுட்ப கல்விக்கூட புத்தாக்க ஆய்வுகூடம் ஆய்வு மற்றும் தயாரிப்புக்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்கும். கூட்டிணைந்த ஆய்வு, பயிற்சித் திட்டங்கள், சான்றிதழ்கள், உள்ளகப்பயிற்சி, தொழில்த்துறை மற்றும் துறைசார் பயிற்சி வாய்ப்புக்களை ஊடாகத் தகவல் தொழில்நுட்பத்தில் உள்ளகத் திறமைகளைக் கட்டியெழுப்புவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.
முதற்கட்டமாக SLIIT பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கில் SLIIT மற்றும் Huawei ஆகிய இணைந்து சான்றளிக்கப்பட்ட பயிற்சி நிலையமொன்றை அமைக்கவிருப்பதுடன், இவர்கள் வெளித்தரப்பினருக்குப் பயிற்சியளிப்பார்கள். இந்தக் கூட்டாண்மையின் ஊடாக SLIIT கண்டி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் Huawei இன் வசதிகளைப் பார்வையிட வாய்ப்புக் கிடைக்கும். இதற்கு மேலதிகமாக கண்டி பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் புத்தாக்க சவால்கள் மற்றும் போட்டிகள் நடத்தப்படவிருப்பதுடன், இது பாடசாலைகள் மத்தியிலும் விஸ்தரிக்கப்படவிருப்பதுடன் விருந்தினர் விரிவுரையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகக் கலந்துரையாடல்கள் என்பனவும் நடத்தப்படவுள்ளன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக SLIIT பட்டதாரிகள் இலங்கை முழுவதிலும் உள்ள Huawei தளங்களில் உள்ளகப் பயிற்சிகள் மற்றும் கள விஜயங்களை மேற்கொண்டு பெறுமதியான தொழில்துறை அனுபவத்தைப் பெற்றுக் கொள்வார்கள். கல்வியியல் பீடமானது Huawei சான்றிதழ் பாடநெறிகள் மற்றும் நாட்டின் தகவல் தொழில்நுட்ப பணியாளர் சக்திக்குத் தேவையான திறமைகளைக் கட்டியெழுப்பும். இணைந்த ஆய்வு முயற்சிகளும் பொறுப்பேற்கப்படும்.
SLIIT கண்டி பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பீடாதிபதி கலாநிதி மாதவ ஹேரத் குறிப்பிடுகையில், “SLIIT மற்றும் Huawei இற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டாண்மையானது SLIIT கண்டி பல்கலைக்கழகத்துக்குப் புதிய அத்தியாயம் மாத்திரமன்றி, இங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறையின் புத்தாக்கம் மற்றும் ஆய்வுக் கலாசாரத்தையும் பலப்படுத்தும். கூட்டு ஆய்வு மற்றும் புத்தாக்க ஆய்வுகூடத்தை நிறுவுவதன் ஊடாக நமது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உலகளாவிய தொழில்நுட்ப முன்னணியாளருடன் ஒத்துழைக்க இணையற்ற வாய்ப்பை வழங்கும். தொழில்துறையின் நிபுணத்துவத்துடன் கல்விசார் சிறப்பை இணைப்பதன் ஊடாக நிஜ உலக சவால்களை சமாளிக்கவும் அதிநவீன தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கவும் எம்மால் முடியும். கல்வித்துறையும் தொழில்துறையும் இணைவதன் ஊடாக மாணவர்களின் நடைமுறைத் திறன் விருத்தியடைவதுடன் மாத்திரமன்றி, நாட்டின் தொழில்நுட்பத் திறன் அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செலுத்தும். டிஜிட்டல் எதிர்காலத்துக்குத் தேவையான திறமையாளர்களை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை நாம் எதிர்பார்க்கின்றோம்” என்றார்.
முன்மொழியப்பட்டுள்ள புத்தாக்க ஆய்வுகூடம் மற்றும் பட்டதாரிகளுக்கு மேலும் ஒத்துழைப்பு வழங்கும் என்பதுடன், அவர்களின் ஆய்வுகளை எளிதாக்குவதற்கும், தொழில்துறை தேவைகளுக்கான தீர்வுகள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்க ஒரு தளத்தை வழங்கும். பட்டப்பின்படிப்பு ஆய்வுகளுக்கு Huawei நிறுவனம் நிதியுதவி மற்றும் வழிகாட்டல்களை வழங்கும்.
இலங்கையின் டிஜிட்டல் ரீதியான மாற்றத்துக்கு தகவல் தொழில்நுட்பத்தில் உள்நாட்டு இளம் திறமையாளர்களை உருவாக்குவது அவசியம் என்பதைப் புரிந்துகொண்டு, SLIIT மற்றும் Huawei இற்கு இடையிலான இந்தக் கூட்டாண்மை நாட்டின் தொழில்நுட்பத்தைப் பலப்படுத்துவதற்கான புத்தாக்க சூழலை உருவாக்க கல்வித் துறையையும், தொழில்துறையையும் ஒன்றிணைக்கும். மேலும், இணைந்த புத்தாக்க ஆய்வுகூடமானது நிஜ உலக வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மற்றும் சந்தைக்குத் தயாரான தீர்வுகளை வழங்குவதற்கு ஆதாரமாக இருப்பதுடன், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்ப நிபுணத்துவத்தைக் கொண்டுவரும்.
பல்கலைக்கழகங்களுடன் கூட்டாண்மைகளை ஏற்படுத்தி இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் திறமைகளை மேம்படுத்துவதில் Huawei நிறுவனம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பது SLIIT உடன் ஏற்படுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் புலப்படுத்துகின்றது. நாட்டின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை மேம்படுத்தும் வகையில், அதிநவீன புத்தாக்க ஆய்வுகூடத்தை அமைப்பதே இந்தக் கூட்டாண்மையின் இறுதி இலக்காகும்.






































Discussion about this post